உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். எட்டாவது காலயாக பூஜை, ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவையுடன் குடமுழுக்கு நடந்தது.
தஞ்சை பெரிய கோயில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. ராஜகோபுரம், அனைத்து விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.
தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மஹாதீபாராதனையும் நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி 5000 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தீயணைப்பு துறை வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் என்சிசி, என்ஆர்சி, ஜெஆர்சி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.