காவல்துறையை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தது காவல்துறை. நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்த முகமது பைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிடுவது போல் முகநூலில் பதிவிட்டிருந்தார், அதன் விளைவாக பைசான் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பார்த்திபன் சமீபத்தில் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் தொடர்புடையவர் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததோடு, மேலும் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கைது நடவடிக்கையை கைவிடக்கோரியும், பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கைதாக மறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் நாகை சுற்றுவட்டாரத்தில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் மோதல் வெடிக்கும் சூழல் இருப்பதாக கூறி நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.