நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டமாக உருவாகும் தென்காசியில் மேற்கொள்ளவிருக்கும் ஆரம்பகட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப தென்காசி வந்தார். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.:
புதிதாக அமையவிருக்கும் தென்காசி மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் குறித்து பல்வேறு இடங்களை ஆய்வு செய்தோம். அது குறித்த விரிவான அறிக்கை முதல்வருக்கு தாக்கல் செய்யப்படும். முதல்வரின் ஒப்புதலுக்கு பின் எந்த இடம் தேர்வு செய்யப்படும் என்பது அறிவிக்கப்படும்.
சமீபத்தில் அரபிக்கடல் பகுதியில் உருவான கியார் புயலில் சிக்கி கரை திரும்பாத குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு படகுகளில் சென்ற 73 மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கடலோர காவல்படை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் ஏற்படும் போர்வெல் விபத்து மற்றும் மழை காலங்களில் ஏற்படும் இடி, மின்னல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தீயணைக்கும் படை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக வரும் 4- ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் துவங்கவுள்ளதாகவும், பின்னர் திருச்சி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.