Skip to main content

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்

இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் மாநிலம் முழுவதும் தடுத்து நிறுத்தி கைது செய்யும் ‘குதிரை பேர’ அதிமுக அரசின் நடவடிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக காவல்துறையை இதுபோன்ற ஜனநாயக ரீதியிலான அமைதிப் போராட்டங்களை அடக்குவதற்காக பயன்படுத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல் மிகவும் வேதனையளிக்கிறது. ‘பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்’ வழக்கமான நிர்வாக நடைமுறையை முதலமைச்சர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. ஆட்சியில் நடக்கும் ‘ஊழல் பேரணியை’ தடுக்காமல், இதுபோன்ற ‘அமைதிப் பேரணிகளை’ தடுத்து நிறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்டப் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ள ஜாக்டோ -  ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று கோட்டை நோக்கிப் பேரணிச் செல்வதாக முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். ஆனால் அரசோ, புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றி பரிசீலிக்கும் கமிட்டிக்கும் காலநீட்டிப்பு கொடுத்து, ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்தவும் கமிட்டிப் போட்டதுடன், அதற்கும் கால நீட்டிப்பு கொடுத்து, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொந்தளிக்க வைத்தது.
 
அரசு ஊழியர்கள் இப்படியொரு போராட்ட அறிவிப்பை வெளியிட்ட உடனேயே எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய நான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து ஏற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க வேண்டுமென்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் அரசு ஏற்கவில்லை. பிரதான எதிர்க்கட்சி முன்வைத்த ஆலோசனையைக் கேட்டு, அரசு ஊழியர்களுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணவும் முன்வரவில்லை.
 
‘நிரந்தரத் தீர்வு’ காண்பதற்கு பதிலாக காவல்துறையை ஏவிவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் இதுபோன்ற போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்பது ஆரோக்கியமான நிர்வாகத்திற்கு அழகல்ல என்பதோடு, முதலமைச்சருக்கு அரசு ஊழியர்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விருப்பமில்லை என்பதும் தெரிய வருகிறது. போராடும் யாரையும் பார்த்துப் பேசுவதற்கு அஞ்சும் முதலமைச்சராக இருப்பதால்தான் ஹைட்ரோகார்பன் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எல்லாம் தொடந்து இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கின்றன.
 
அதே எண்ணவோட்டத்தில் அரசு ஊழியர்களை ஆங்காங்கே கைது செய்வது மட்டுமின்றி, தூர்வாரும் பணிகளை பார்க்கப் போன என்னை கோவை புறநகரில் உள்ள சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்தது போல், சென்னை நோக்கிப் புறப்பட்ட அரசு ஊழியர்களை சுங்கச்சாவடிகள் இருக்கும் இடங்களில் வழிமறித்து கைது செய்யும் காவல்துறையின் இந்தப் புதுவித கலை மிகுந்த ஆபத்தானது.
 
‘சுங்கச்சாவடி கைது’கள் செய்யும் ‘குதிரை பேர’ அரசு, போராட்டங்களைத் தற்காலிகமாக ஒடுக்க முற்படலாம். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனதில் நிரந்தர உயிரோட்டமாக இருக்கும் உணர்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர வேண்டும். மக்களின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்கள்தான் மிக முக்கிய நிர்வாகத் தூண்களாக இருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உணர்ந்து, அரசு ஊழியர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, அவர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அமைத்துள்ள கமிட்டி மற்றும் ஏழாவது ஊதியக்குழுப் பற்றிய கமிட்டி ஆகியவற்றை உடனடியாக அறிக்கை கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்