Skip to main content

பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள் கண்டெடுப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Discovery of Pot Symbols at Pandyan Fort

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன்,செயலாளர் இரா.நரசிம்மன்,கள ஆய்வாளர் கா. சரவணன், உறுப்பினர் சு.காளீஸ்வரன் ஆகியோர் காளையார்கோயில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில்  ஈடுபட்டதில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, 'திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும்  காட்சி தருகிறது.

கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி புறநானூற்றில் 21 வது பாடலில் இடம் பெற்றுள்ளது, இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும் அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும் அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன.இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுவதும்  பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. மேலும் பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் மோசிதபன் என்று எழுதப்பட்ட பானை ஓடும் முன்பு கிடைத்தது, நெசவுக்கு அல்லது வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது‌.

பானை ஓட்டு குறியீடுகள்

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில்  தற்பொழுதும் பானை குறியீடுகள் கீறல்கள் கிடைத்துள்ளன.

பானை ஒட்டு குறியீடுகள் கீறல்கள் தங்களது பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாகவோ அல்லது வேறு செய்தியை தெரிவிப்பதற்காகவோ பொறிக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும் எழுத்தறிவு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன. இன்றும் நம்மிடையே குறியீடுகள் பொறிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. முக்கோண வடிவிலான குறியீடு, சதுர வடிவிலான குறியீடு சிதைவுற்ற வடிவில் கிடைத்துள்ளன, க ண போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானையோடு கிடைத்து இருந்தாலும் தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் அது குறியீடாகவே கருதப்படுகிறது.

Discovery of Pot Symbols at Pandyan Fort



எலும்பாலான கருவி முனை

சங்க காலத்திலேயே நமது முன்னோர்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளையும் பயன்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்து இருக்கக்கூடிய எழும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதே போன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சரிடம் விண்ணப்பம் வழங்கியதின் வழி தொல்லியல் துறை கள மேலாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல் நடைக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர், இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் தொல்லியல் துறை அடுத்து வரும்  ஆண்டுகளில் அகழாய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்