சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் மணியன் மீது ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டம் 2013 இயற்றப்பட்டு முதல் துணைவேந்தராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றியவர் டாக்டர் எஸ்.மணியன். கடந்த மே மாதம் 27ந் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவர் பணி ஓய்வு பெற்றார். இதனால் புதிதாக துணைவேந்தரை அமைக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் புதிய துணைவேந்தரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கர் ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.எஸ்.குமார், நீதிவளவன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குமார் கூறியதாவது.
பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். பல்கலைக்கழக முறைகேடுகளை சரிசெய்ய தமிழக அரசு நிர்வாக அதிகாரியை அமைத்தது. அதன் பிறகு துணைவேந்தராக டாக்டர் மணியன் நியமிக்கப்பட்டு அவரது பதவிக்காலமும் முடிந்து விட்டது.

இந்நிலையில் முந்தைய துணைவேந்தர் மணியனே மீண்டும் துணைவேந்தராக வருவதற்காகன முயற்சிகளை எடுத்து வருவதாக அறிகிறோம். மீண்டும் அவர் வந்தால் பல்கலைக்கழகத்தில் ஒன்றுமே இருக்காது. அரசு சொன்ன எதையுமே அவர் பணிக்காலத்தில் செய்யவில்லை. பணி ஓய்வு பெறும் நிலையிலும் விதிகளை மீறி பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட ஆசிரியர் சங்கங்களை பிரித்தாளுகிறார்கள். மேலும் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழக அரசு பணியிடங்களுக்கு செல்லும் ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள மாவட்டத்திலும், பணம் கொடுக்காமல் கேள்வி கேக்கும் ஊழியர்களை தமிழகத்தின் கடைகோடியில் தூக்கியடித்துள்ளனர்.
ஊழியர்களை பணிமாறுதல் தொடர்பாக கலந்தாய்வு மூலம் செய்யுங்கள் என்று பல முறை கோரிக்கை விடுத்தோம் அதனை ஏற்காமல் பணமே குறிக்கோளகச் செயல்பட்டு துணைவேந்தராக இருந்த மணியன் தற்போது பதிவாளர் பணியில் உள்ள ஆறுமுகம் ஆகியோர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்கள் இருவருமே துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஊழல் வாதிகளை துணைவேந்தராக நியமிக்க கூடாது. தொலைதூரக் கல்வி மையத்தின் பாடப்பிரிவுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தனியாருக்கும் உறவினர்களுக்கும் தாரை வார்த்து, நிதி இழப்பை மணியன் மற்றும் பதிவாளர் ஆறுமுகம் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
நீதிவளவன் கூறுகையில், துணைவேந்தராக இருந்த மணியன், பதிவாளர் பொறுப்பு வகிக்கும் ஆறுமுகம் உள்ளிட்டோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். பணியிட மாறுதல், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவு முறைகேடு நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் ரோஸ்டர் முறை கடைபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் மீது நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும். இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவில் தமிழக ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்றார். தமிழக ஆளுநரை சந்தித்த பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினர்.