பேக்கரியில் டீ மாஸ்டராக இருந்தவர், தான் தங்கியிருந்த அறையின் கீழே தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவத்தில் சக ஊழியர்களே கட்டையால் தாக்கிக் கொன்றதாக இறந்தவர் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கிராமம் ஏம்பல். இங்குள்ள சந்தை, கடைவீதிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள சிவகங்கை மாவட்ட மக்களும் தினசரி வந்து செல்வர். இங்கு வயலாங்குடி கணேசன் என்பவர் நடத்தும் பேக்கரியில் சிவகங்கை மாவட்டம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 35) தங்கி இருந்து டீ மாஸ்டராக வேலை செய்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மாதம் சக ஊழியருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடையில் இருந்து நின்றவர், தீபாவளிக்காக மீண்டும் சில நாட்கள் வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளி அன்று தனது தாயாருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் பார்க்கச் செல்வதாக சொந்த ஊருக்குச் சென்றார். நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏம்பல் வந்தவர், பேக்கரி ஊழியர்கள் தங்கும் அறைக்குச் சென்றுள்ளார்.
அங்கு, சக ஊழியரான தேவகோட்டை வட்டம் நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (எ) ரெங்கையாவும் அவரது நண்பர் ஆகியோர் ராமச்சந்திரனுடன் சண்டையிட்டுள்ளனர். சத்தம் கேட்டு கீழே உள்ள கடைக்காரர்கள் பேக்கரி முதலாளி கணேசனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கணேசன் வந்து பார்த்தபோது ராமச்சந்திரன் மாடிக்கு ஏறும் படிக்கட்டு அருகே சந்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஏம்பல் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ராமச்சந்திரன் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்து வந்த ராமச்சந்திரனின் மனைவி பஞ்சவர்ணம் ஏம்பல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், தனது கணவரை ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர் விசு என்கிற சுப்பிரமணி ஆகியோர் கட்டையால் தாக்கிக் கொன்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். போலீசார் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில் டீ மாஸ்டர் இறப்பில் உள்ள மர்மங்கள் வெளிவரும். பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல் உள்ளது.