
கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்து கொள்வதாக கூறி 10க்கும் மேற்பட்ட வாடகை கார் உரிமையாளர்களிடம் கார்களை எடுத்து சென்று பல நாட்களாகியும் வாகனங்களைக திருப்பி தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும்,தன்னிடம் வந்த கோவை சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் தனது 6 கார்களையும்,தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இதே போன்று நாளிதழ்களில் விளம்பர படுத்தி பல்வேறு டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களை வாடகைக்கு எடுத்து விற்று விட்டதாகவும், அஜித் மீது வழக்கு பதிவு செய்து தங்களது கார்களை மீட்டு தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இதே போல் அஜித் தங்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து வேறு ஒருவருக்கு அடமானம் வைத்து விட்டதாகவும் இது போன்று பல நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் 10 க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் இவருடன் சேர்ந்து புகார் அளித்தனர்.அப்போது அஜித் சொல்லியதாக கூறி தங்களின் கார்களை எடுத்து சென்ற, அவரிடம் பணியாற்றிய சந்துரு என்பவரை பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் தேடி பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.மேலும் கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்....