Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படாது!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

tamil nadu fully ration shops closed issue 
மாதிரி படம்

 

சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை காலை 10 மணி அளவில் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட மெய் காவல் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்துள்ளனர். இவர் நின்றபோது அவர்கள் கத்தியை எடுத்துள்ளனர். இதனைப் பார்த்து பயந்து இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு இவர் ஓடியுள்ளார்.

 

அப்போது இவரை விடாமல் துரத்திச் சென்று இவரது தலையில் மூன்று இடத்தில் பலமாக வெட்டியுள்ளனர். இவர்கள் வெட்டும்போது தடுத்ததால் இவரது கைவிரல் துண்டாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இவரை 108 அவசர ஊர்தி மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக் கரைகளை காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

 

இதேபோல் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு, இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் இவரது தலையில் அடித்ததால் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் மீது மீண்டும் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜாவை மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டப் பகலிலேயே அவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். திட்டமிட்டே மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றனர். எனவே தமிழக உள்துறை செயலாளர் இதில் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து வியாழக்கிழமை (06.04.2023) தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.