தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வித்துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளப் பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்றார்.
இதனிடையே, அக்டோபர் 15- ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க ஏற்கனவே அனுமதி அளித்திருந்த மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.