அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அதன் பிறகு 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான தமிழகத்தை நோக்கி நகரும். இதன் காரணமாக வருகிற 19ஆம் தேதி தமிழகம், புதுவையில் மழை பெய்யத் தொடங்கும். தொடர்ந்து 20 மற்றும் 21ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும். நாளைய தினம் மழை எச்சரிக்கை எதுவும் இல்லை. மீனவர்கள் 18, 19-ந்தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றார்.