தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் பழக்கமிஷன் மண்டியின் உரிமையாளர் ஆவார். இவரது மகள் ஆஷிபாவிற்கு திருமணம் செய்வதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பிரம்மாண்டமாக 5 ஆயிரம் அழைப்பிதழை அச்சடித்து வெளியூரைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த மண்டபத்தை ரத்து செய்தார். ஆனால், திருமணத்தைத் தள்ளி வைக்காமல் வீட்டில் நடத்த உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 16 முதல் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அடையாள அட்டை அடிப்படையில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படாது. எனவே பொதுமக்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்தது. மேலும் அப்பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அரசு அனுமதி பெற்று 5 பேர் மணமகனுடன் அதிகாலையில் பேராவூரணி வந்துவிட்டனர்.
அதேபோல் மணமகள் வீட்டு தரப்பில் 10 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில் காலை 07.00 மணியளவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து மணமக்கள் வீட்டார் கூறியது, 5 ஆயிரம் பேருக்கு மதிய விருந்து கொடுத்து திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் கரோனாவால் அரசு உத்தரவை மதித்து எளிய முறையில் சமூக இடைவெளியுடன் திருமணத்தை நடத்தினோம்" என்றனர்