திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 29 ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உள்ளாட்சி தேர்தல், மகளிர் மாநாடு மற்றும் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் என பிரித்து மாவட்ட மக்களின் நலன்கருதி உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியுடன் பாமகவின் கூட்டணி தொடரும். அதிமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணி, இது வெற்றிக்கூட்டணி. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இதற்கு சான்று, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வெற்றி என்பதை குறிப்பிடுகிறேன்" என்றார்.