உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், திமுக எம்எல்ஏக்கள், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் காலத்தில் சமவாய்ப்பு உருவாக்க வேண்டும். வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென நீதிமன்றத்தை நாடுவோம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து ஒருமனதாக ஏற்பு. தேர்தல் வேண்டாம் என சொல்லவில்லை; சட்டப்படி நடத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு கண்டனம். உச்சநீதிமன்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் எப்படியாவது தடைப்படட்டுமே என்ற நோக்கத்துடன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது ஆணையம். புதிய மாவட்டம், ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் என அரசும், ஆணையமும் குழப்பங்களை ஏற்படுத்தின. மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே என்ற நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்க தயார். உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலை வரவேற்கிறோம் என்று திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர்.