"சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு திருச்சியில் மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருப்பது அரசின் தவறான நடவடிக்கை. வ.உ.சி குருபூஜைக்கு மரியாதை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் அளப்பரிய தியாகத்தை இந்த உலகமே அறியும். உலகம் போற்றும் உத்தமர் சிலைக்கு திருச்சியில் மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. இச்செயல் வேதனையளிக்கிறது. கரோனா பெருந்தொற்று பாதிப்பிற்குப் பிறகு எத்தனையோ நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து இருக்கிறது. அதற்கெல்லாம் இந்த அரசு அனுமதி அளித்திருக்கிறது. வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருக்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது இது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. பல்வேறு சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் 18 ஆம் தேதி காலை, குருபூஜை நிகழ்ச்சியையொட்டி மாலை அணிவிக்கத் தயார் நிலையில் இருக்கும் போது, திடீரென்று அரசு அனுமதி மறுத்திருப்பது யாருடைய தூண்டுதலின் பேரில் என்று தெரியவில்லை. வ.உ.சி போன்ற தியாகிகளின் குருபூஜையை, வெகுவிமர்சையாகக் கொண்டாட வேண்டிய சூழ்நிலையில், ஆர்வத்தோடு மாலை அணிவிக்கத் தயாரானவர்களை, அரசு தடுத்தது ஒவ்வொருவருடைய மனதையும் புண்படுத்தி இருக்கிறது. அரசு உடனடியாக திருச்சியில் உள்ள வ.உ.சி சிலைக்கு குருபூஜை தின மரியாதையைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
.