Skip to main content

"தி.மு.க ஆட்சியில் டெண்டர் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன"! - எடப்பாடி பழனிசாமி பேட்டி... 

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

tamilnadu cm press meet at thoothukudi airport

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறேன். பொங்கல் பரிசு வழங்குவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டு கூறுகிறார். நான் முதல்வரானதில் இருந்து ஊழல் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். கரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தைப் போன்று டெண்டர் இல்லை; தற்போது இ- டெண்டர் விடப்படுகிறது. 

 

இ-டெண்டர் முறையில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த டெண்டர்களில் தான் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன, தொழில் முனைவோரை ரத்தினக் கம்பளம் கொண்டு வரவேற்போம். தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூபாய் 200 கோடிக்கு கணக்குப் போட்டுவிட்டு, ரூபாய் 425 கோடி தந்தார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில், சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர்களில் ஊழல் நடைபெற்றுள்ளது.

 

'ஆற்காடு- திருவாரூர்', 'நாகை- கட்டுமாவடி' வரை சாலை அமைத்ததில் தி.மு.க. ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளது.  தி.மு.க ஆட்சியில் 'ராமநாதரபுரம்- தூத்துக்குடி' வரை சாலை அமைத்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் டெண்டர்கள் விட்டதில் தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளன. மு.க.ஸ்டாலினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், திமு.க ஆட்சியிலும் டெண்டர் எடுத்தவர்கள் தான். பொய்யான தகவல்களை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தி.மு.க தேடுகிறது. ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, அன்பரசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கடுகளவும் ஸ்டாலினுக்கு எண்ணமில்லை" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்