
தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக சில பாஜக கூட்டணிக் கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று இருந்தனர். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தைத் திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்பட உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஓடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையைப் பெற இது ஒரு தொடக்கம் தான். நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம் மற்றும் முன்னெடுப்பு தொடர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்பி அடங்கிய குழு நேரில் சென்று தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பதை நேரில் விளக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது தனிப்பட்ட ஒரு கட்சியினுடைய பிரச்சனை அல்ல தமிழ்நாட்டினுடைய பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் அனைத்து கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, பிற மாநில முதல்வர்கள் மற்றும் அம்மாநில அரசியல் தலைவர்களை திமுக குழுவினர் இன்று முதல் பயணப்படவுள்ளனர். அதன்படி, இன்று(11.3.2025) அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் எம்.பி. தயாநிதிமாறனும் ஒடிசா செல்கின்றனர். நாளை(12.3.202) அமைச்சர் பொன்முடியும் எம்.பி.அப்துல்லாவும் கர்நாடகாவிற்குச் செல்கின்றனர். நாளை மறுநாள்(13.3.2025) அமைச்சர் கே.என்.நேருவும், எம்.பி.யும் வழகறிஞருமான என்.ஆர். இளங்கோவும் தெலுங்கான செல்கின்றனர்.
இந்த பயணத்தில் அரசியல் தலைவர்களை சந்திக்கும் இவர்கள், தொகுதி மறுவரையறை குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டினை அழுத்தமாக எடுத்துச் சொல்லவிருக்கின்றனர். மேலும், முதல்வரின் கடிதமும் அவர்களிடம் தரப்படவிருக்கிறது. அத்துடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 'கூட்டு நடவடிக்கைக் குழு'வில் இடம்பெறவேண்டும் என்பதையும் அமைச்சர்களும் எம்.பி.க்களும் வலியுறுத்தவுள்ளனர்.