Skip to main content

'பீகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்'-ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
'Tamil Nadu government should learn from Bihar'- Ramadoss insists


மதுவிலக்கினால் ஏற்படும் மகிமைகளை பீகாரிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள் தவிர்ப்பு, 18 லட்சம் இளைஞர்கள் உடல் பருமன் குறைபாட்டுக்கு ஆளாவது தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான  தாக்குதல்கள்  குறைவு, ஆண்களின் மது குடிக்கும் அளவு பெருமளவில் குறைவு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் ஒற்றை ஆணையால் சாத்தியமாகியுள்ளன. பீகாரில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று  2016-ஆம் ஆண்டில் பீகார் அரசு பிறப்பித்த அரசாணை தான்  மேற்கண்ட அனைத்து நன்மைகளுக்கும் காரணமான  ஒற்றை ஆணையாகும்.

The Lancet Regional Health – Southeast Asia இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் இந்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.  உலகப்புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட  குழுவினர் இணைந்து, பீகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து ஆய்வு செய்து  இந்தக் கட்டுரையை  வெளியிட்டுள்ளனர்.  இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, பீகாரில் மதுவிலக்கு நடைமுறப்படுத்தப்பட்டு  இருப்பதால் அங்கு அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து  மக்கள் விடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

லான்செட் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களைக் கடந்து, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மேலும் பல உண்மைகளும் உள்ளன.  பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை, 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு விற்பனையான மதுவின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது கடந்த 8 ஆண்டுகளில் மதுவால் நிகழ்ந்திருக்க வேண்டிய  8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பீகார் மாநிலத்தின்  ஒட்டுமொத்த  உற்பத்தி மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.  இவை நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் ஆகும்.

'Tamil Nadu government should learn from Bihar'- Ramadoss insists

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் போதெல்லாம்  மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும், அரசின் வருவாய் குறைந்து விடும்  என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது.  பீகார்  மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால்  அங்கு கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் மது வணிகத்தால் குடும்ப வன்முறைகள், குற்றங்கள், சாலை விபத்துகள், மனநல பிரச்சினைகள், தற்கொலைகள், ஆண்மைக் குறைபாடு, இளைஞர்களின் செயல்திறன் குறைவு, பொது அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.  மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பணி செய்வதற்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்காமல் உற்பத்தி குறைகிறது.  இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரிழப்பதால் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து  இந்தியாவிலேயே  அதிக கைம்பெண்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, மதுவணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை  மட்டும் கருத்தில் கொண்டு  மதுவணிகத்தை ஊக்குவித்து  வருகின்றனர்.  இது சரியான  பாதை அல்ல.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் மது வணிகம் நடைபெற்ற போது சென்னை மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார் இராஜாஜி. அதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார்  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அந்த மதுவிலக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதுகாத்தனர். மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், மக்கள் நலனே முக்கியம் என்று கருதி இந்த முடிவை அவர்கள்  எடுத்தனர்.

அவர்களைப் போலவே, மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும்  என்பதை பீகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும் உடனடியாக  மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

உள் ஒதுக்கீடு; விவாதிக்க அமைச்சர் தயாரா? - அன்புமணி சவால் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Anbumani challenges minister sivasankar to discuss reservation

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸடாலின், “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்” என்று பதிலளித்தார். 

இதனைத் தொடர்ந்து ஜி.கே.மணியின் கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர், “முன்னாள் முதல்வர் கலைஞர்தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். ஆனால் அவரை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போன்று சித்தரிக்கும் வேலையை பாமக தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள். 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் தற்போது கைகோர்த்துள்ளீர்கள் என பதிலடி கொடுத்தார். நீண்ட நேரம் தொடர்ந்து அவரின் உறையில் பாமக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  

இந்த நிலையில் இன்று செதியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக விவாதத்திற்கும்  அழைப்பு விடுத்துள்ளார்.  அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.  தேதி,  இடம்,  நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்.

திண்டிவனத்திலிருந்து ராமதாஸ் குரல் ஒலிப்பதாக  அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார்.  அந்த குரல் மட்டும்  ஒலிக்க வில்லை என்றால் சிவசங்கர்,  அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது.  இது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதால் மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இது வன்னியர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல; தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனை. தற்போது கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் முறையாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் பட்டியலின மக்களுக்கு தற்போது வழங்கும் 18 சதவீதத்துக்கு பதிலாக 22 சதவீதம் கிடைக்கும்.  தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீகாரில் சாதி வாரி  கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.  அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்து இருக்கிறார்கள். 

இது புரியாமல் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தமிழக முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் எந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்  ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது?  எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தாமல் எம்பிசிக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க முடியுமானால் வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி  கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மேலும், “கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுகிறது என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு எம்எல்ஏவின் தம்பி தான் இதை முழுவதுமாக கவனித்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தும் எங்கள் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.  இது வேடிக்கையாக உள்ளது. எங்களிடம் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.