
நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
''கவர்னர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு. கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது.
சமீபகாலமாகவே கவர்னர் குறித்தும், கவர்னர் மாளிகையின் அணுகு முறைகள் குறித்தும் எதிர்மறைச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பொது ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் இவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கவர்னர் மாளிகையின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்துள்ள புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை கைது செய்திருப்பது இதழியல் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். எந்த ஒரு செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை என்பது ஒரு நியாயமற்ற போக்காகும்.
கவர்னர் மாளிகை இது போன்ற அணுகு முறையை கைவிட வேண்டும் என்றும், திரு கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்''.