நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ கூறியுள்ளது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப., முதலமைச்சரின் செயலாளர் உதயசந்திரன் இ.ஆ.ப., உள்ளிட்டோரும் விமானத்தில் சென்றுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.