செந்துறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடிக்க தண்ணீரும் இல்லை, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணமும் இல்லை என்று செந்துறை திமுக ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தை 10-10-1999 அன்று திமுக ஆட்சிகாலத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ். சிவசுப்பிரமணியம் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நாஞ்சில் கி. மனோகரன் திறந்துவைத்தார்.

வாழ்வாதாரத்திற்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளுக்கு பொதுமக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தரும் இடமாக இந்த வட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. மக்கள் குறை தீர்க்கும் அலுவலகத்தில் கடந்த 6 மாதமாக தண்ணீர் பஞ்சம்.
குடிநீர் வடிகால் வாரியத்திற்க்கு பலமுறை தகவல் தந்தும் போதிய நிதி இல்லாததால் எங்களால் புதிய ஆழ்குழாய் கிணறு போட முடியாது என மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியுறியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லை. பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லாத நிலையில் செந்துறை வட்டாச்சியர் அலுவலகம் உள்ளது.
வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அருகில் பத்திரப்பதிவு அலுவலகம், அரசு கருஊலம், ஊட்டச்சத்து அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சேமிப்புக் கிடங்கு ஆகிய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடி கவனம் செலுத்தி வட்டாச்சியர் அலுவலகத்தில் புதிய ஆழ்குழாய் போர் போட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். மேலும் RO System அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.