நீலகிரி மாவட்ட மலர் விவசாயிகளின் கடன்களை வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட மலர் வளர்ப்பு சிறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.விஸ்வநாதன், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 2003-ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி துறையும் வீழ்ச்சியை சந்தித்ததால், மலர் வளர்ப்பு விவசாயத்திற்கு விவசாயிகள் மாற, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அவ்வாறு மாறும்போது, 500 சதுர மீட்டர் அளவிலான நறுமண மலர்கள் வளர்ப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டது.
இதன்படி, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி மூலம் கடன் பெற்று, மலர் விவசாயம் செய்த நிலையில், 2008-ஆம் ஆண்டு, ஜூன் ஜூலை மாதங்களில் வீசிய புயல் காரணமாக, விவசாயிகள் முழுமையாக பாதிப்படைந்தனர். ஆனால், கடன் தொகையை மீண்டும் வசூலிப்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் கடுமையாக்கியதால், 2010-ஆம் ஆண்டு முதல், மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் பல மனுக்களை கொடுத்துள்ளோம்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சியர் அமைத்த கூட்டுக்குழுவின் மூலம் எடுக்கப்பட்ட முடிவில், அசல் தொகை 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில், பாதி தொகையை செலுத்துவது என்றும், வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை, தற்போது வங்கிகள் தீவிரப்படுத்தியுள்ளதால், கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு, அக்டோபர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.