கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சுவாமி சகஜானந்தா அனைத்து சமூக ஏழை மக்களும் கல்வி அறிவால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையில் சிதம்பரம் அருகே ஓமக்குளம் என்ற இடத்தில் சிறிய கல்விக் கூடத்தை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வியைப் பயிற்றுவித்தார்.
நாளடைவில் அவர் தொடங்கிய பள்ளிகள் நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் துவக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இது ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழகத்திலே பெரிய பள்ளியாகும். அதேபோல் நந்தனார் தொழிற்பயிற்சி கூடமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுவாமி சகஜானந்தாவின் கல்வி சேவை மற்றும் ஆன்மீக சேவையை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் அவருக்கு ரூ1 ஒரு கோடியே 25 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார். இவர் பிறந்த ஜனவரி 30-ந் தேதி அரசு விழாவாக மணிமண்டபத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த மணிமண்டபத்திற்கு நந்தனார் பள்ளியில் பயின்ற மாணவர்கள், சுவாமி சகஜானந்தா மீது பற்றுள்ள அனைவரும் தினமும் வருகை தந்து வழிப்பட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது மணிமண்டபத்திற்கு அருகே உள்ள குளக்கரை நடைபாதை பகுதிகளில் தினமும் சுத்தம் செய்யாமல் உள்ளதால் அந்தப் பகுதி விஷசந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் மணிமண்டபத்தின் கதவு உள்ளிட்ட கட்டிடத்தின் வண்ணப்பூச்சுகள் அழிந்து சிதிலமடைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதனை சரி செய்து குளக்கரையில் பாதை அமைத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் இது நடைப்பயிற்சிக்கு வசதியாகவும் அந்த இடங்கள் சுத்தமாகவும் இருக்கும். மேலும் மணிமண்டபத்தின் எதிரே இளநீர் குடுக்கைகள், குப்பைகள் என அசுத்தமாக உள்ளது. இவைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சகஜானந்தா மணிமண்டபம் மீது பற்றுள்ள சிலர் கூறுகையில், இந்த மணிமண்டபத்தில் நான்கு ஊழியர்கள் இருந்தனர். தற்போது 2 பேர் மட்டுமே உள்ளதால் மணிமண்டபத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமண்டபத்தில் உள்ளே தேவையில்லாத செடிகள் மற்றும் குளக்கரையை சுற்றி புல்கள் காடு போல் வளர்ந்துள்ளது. இந்த இடத்தில் காலை வைப்பதற்கு பயமாக உள்ளது. இதில் விஷ பாம்புகள், பாம்பு குட்டிகள் உள்ளதாக அங்குள்ள ஊழிர்களே கூறுகிறார்கள். எனவே மணிமண்டபத்தை பராமரிக்க தேவையான ஆட்களை நியமித்து உடனடியாக மணிமண்டபத்தையும் அதன் சுற்றுவட்ட பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடந்த ஜூலை 8-ந் தேதி சென்னையில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் சகஜானந்தா மணிமண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் நிதி ரூ 23.50 லட்சத்தில் கல்வி பயிற்சி மையமும், தமிழக அரசு நிதி ரூ 24 லட்சத்தில் நூலகமும் கட்டப்பட்டுள்ளது. அதன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக ஒரு ஆண்டாக காத்திருப்பதாகவும். அதனைப் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இதனைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் குரலாக உள்ளது.