ஆத்தூர் அருகே, பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை, காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (76). தொழில் அதிபர். இவருக்குச் சொந்தமாக அந்தப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் கடைகள் உள்ளன. அவற்றில் இருந்து மாதம் பல லட்சம் ரூபாய் வாடகை வருமானம் பெற்று வருகிறார்.
இவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் விஜயா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர்களுக்கு கவுசல்யா (17) ஒரு மகள் இருக்கிறார். (தாய் மற்றும் மகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கவுசல்யா, ஆத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.
மாணவியின் தந்தை இறந்து விட்டார். தாய், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில், தொழில் அதிபர் நடராஜனின் வீட்டிற்கு அடிக்கடி மாணவி கவுசல்யா சென்று வீட்டை சுத்தம் செய்வது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம்.
அவ்வாறு வேலைக்குச் செல்லும்போதெல்லாம் சிறுமியிடம் நடராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவருடைய தொல்லைகள் எல்லை மீறியதால், வேதனை அடைந்த கவுசல்யா இதுகுறித்து தனது சித்தியிடம் கூறினார். அவரும் இதுபற்றி நடராஜனிடம் கேட்டதற்கு, அவரையும் நடராஜன் மிரட்டி அனுப்பி உள்ளார்.
இதையடுத்து கவுசல்யா, ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் பிப்ரவரி 11ம் தேதி நடராஜன் மீது புகார் அளித்தார். அதில், தனக்கு நடராஜன் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதாகவும், அதை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
காவல் ஆய்வாளர் கேசவன், உதவி ஆய்வாளர் வான்மதி ஆகியோர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பலமுறை சிறுமியிடம் தவறான உறவுக்கு வற்புறுத்தி இருப்பதும், பாலியல் ரீதியில் தொல்லைகள் கொடுத்து வந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை காக்கும் சிறப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் நடராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருடைய நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களிடமும் ஏதாவது பாலியல் ரீதியில் தொல்லைகள் கொடுத்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.