அண்மையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பச்சை அரிசி மற்றும் சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்தநிலையில் கடலூரில் பன்னீர் கரும்பை அரசு கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பத்திரக்கோட்டை, மதனகோபாலபுரம், கருப்பஞ்சாவடி, கட்டியான்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சாலையில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் சாலையில் உணவைப் போட்டு தலையில் அடித்துக் கொண்டு உணவு சாப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். இருப்பினும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.