வேலூர் மாவட்டத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் இருந்து கரும்பு விவசாயிகள் கரும்பை பயிரிட்டு, பின்பு சாகுபடி செய்து இங்கே அனுப்புகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதால் சரியாக கரும்புக்கு தரவேண்டிய தொகையை தந்துவிடும் என நினைத்தனர். அப்படி நினைத்தது எவ்வளவு வீண் என்பதை பின்பு தான் விவசாயிகள் புரிந்துக்கொண்டனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு அனுப்பின விவசாயிகள். அதனை பெற்றுக்கொண்ட ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகையை மட்டும் நாளை தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன் என்று கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருகிறது. விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவை தொகை மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

எங்களுடைய நிலுவை தொகையை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் வலியுறுத்தினோம். ஆனால் நிலுவை தொகை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. அதனால் தான் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி அக்டோபர் 10ந்தேதி காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.
விரைவில் நிலுவை தொகையை வழங்கி விடுகிறோம், போராட்டத்தை கைவிடுங்கள் என அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.