திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி அருகே உள்ள இனாம் குளத்தூரில் அரசு மேல்நிலையைப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடந்துவருகிறது. இந்நிலையில், தேர்வின் போது 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆங்கில ஆசிரியர் முருகேசன் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவி அவரது உறவினர்களிடமும், நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் திரண்டனர். அதனால், பள்ளி வளாகம் முழுக்க பரபரப்பாகக் காணப்பட்டது. அதற்குள் சக ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர் முருகேசனை ஒரு அறைக்குள் அனுப்பிப் பூட்டி வைத்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து இனாம்குளத்தூர் காவல்நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் மாணவியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் (ஜீயபுரம்) ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆசிரியர் முருகேசனை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
அதேசமயம், மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, முருகேசனின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசிய 8 பேர் மீது பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 17 வயதுடைய மாணவர்கள் 4 பேரும், மற்ற வாலிபா்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.