தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் 'Spoken English'பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்திற்கு ஒரு கையேடு வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதேபோல் 6- ஆம் வகுப்பு முதல் 9- அம் வகுப்பு வரை மூன்று பருவங்களுக்கும் சேர்த்து நான்கு கையேடுகள் வகுப்பு வாரியாக வழங்கப்படும் எனவும், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக கையேடுகள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடங்கள் என கால அட்டவணை தயாரிக்க வேண்டும். அதை தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வாரத்திற்கு 45 நிமிடங்கள் என ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அட்டவணையை தயாரிக்க வேண்டும். தொடக்க நிலை கையேட்டில் மாணவர்கள் செயல்பாட்டு அறிக்கையை ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஆங்கில பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.