Skip to main content

தமிழரசனை  மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று ஏன்? - சு.வெங்கடேசன் 

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
Su. Venkatesan questions the police

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து,  டங்ஸ்டன் கணிம சுரங்க திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் தமிழரசனை  மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடுதான் நடந்தது. இப்படியான நிலையில் நேற்று நடந்த பேரணியில் DYFI -யின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசனை மட்டும் காவல்துறை குறிவைத்து இழுத்துச் சென்றது ஏன்?

மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தோழர் தமிழரசன். 
சமீபத்தில் DYFI நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்?

அங்கிருக்கும் மக்கள் தமிழரசனை காவல்துறையிடமிருந்து மீட்டிருக்காவிட்டால்  காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன.  காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

சார்ந்த செய்திகள்