இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்து வருபவர் சோம்நாத். இவரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் 11வது தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வி.நாராயணன், தனது பள்ளிப்படிப்பை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைப் படிப்பை சிஎஸ்ஐ பள்ளியிலும் படித்து முடித்தார். கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த வி.நாராயணன், போரக்பூர் ஐஐடியில் கிரையோஜெனிக் பொறியியல் பிரிவில் எம்.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1984ஆம் ஆண்டில் இஸ்ரோவில் சேர்ந்த அவர், ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றார். 40 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த அவர், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல் 1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்.கே 3 , சந்திரயான் 2 ஆகிய திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். தற்போது திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மையத்தின் (L.P.S.C.) எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு, ஐஐடி கரக்பூர் கல்லூரி வெள்ளிப் பதக்கமும், இந்திய விண்வெளி மையம் தங்க பதக்கமும் வழங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், விஞ்ஞானி நாராயணனுக்கு விருது வழங்கப்பட்டது.
உலக நாடுகளை இந்தியாவை நோக்கி வியந்து பார்க்க வைத்த சந்திரயான் 1 திட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை என்பவர் திட்ட இயக்குநராக தலைமை ஏற்று செயல்படுத்தினார். இதனால் இவருக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. அதன் பிறகு, தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் தலைவராக பதவி வகித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022அம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக சிவன் பதவி வகித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
வி.நாராயணன் தொடர்ந்து 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகின்ற சுகன்யான், வெள்ளிக்கோள் ஆய்வில் ஈடுபடும் சுக்ரயான் போன்ற திட்டங்கள் விஞ்ஞானி வி.நாராயணன் மேற்பார்வையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வி.நாராயணன் என இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் கோலோச்சி வருவது பெருமை வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.