கோவை உடையம்பாளையம் பகுதியில் ரவி - ஆபிதா தம்பதியினர் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 12 வது வார்டு கவுன்சிலராக பாஜக சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணி என்பவர், தள்ளுவண்டிக் கடைக்கு வந்து, இங்கே பீப் பிரியாணி எல்லாம் விற்க கூடாது என்று மிரட்டியுள்ளார்.
மேலும், “கடையில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி வேண்டுமானால் விற்றுக்கொள்ளுங்கள்; மாட்டிறைச்சி மட்டும் விற்க கூடாது. யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வாங்க.. இது ஊர் கட்டுப்பாடு” என்று மிரட்டியுள்ளார். இதற்கு ஆபிதா, “நாங்கள் யாரை வற்புறுத்திச் சாப்பிட வைக்கவில்லை. பக்கத்துக் கடையில் மீன் எல்லாம் விற்பனை செய்கிறார்கள், அதையும் எடுக்கச் சொல்லுங்கள்; நாங்களும் எடுக்கிறோம் என்று என்று கேட்க, ஆத்திரமடைந்த சுப்பிரமணியோ, அதெல்லாம் எடுக்கச் சொல்ல முடியாது; இங்க மாட்டிறைச்சி விற்க கூடாதுன்னா விற்க கூடாதுதான்” என்று கறார் காட்டியுள்ளார்.
இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து பேசிய தம்பதியினர், சுப்பிரமணி தொடர்ந்து இதுபோன்று மிரட்டல் விடுவதால் தங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.