
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள 3 திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் மூலம், பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
அதேசமயம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்(NLC) மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனைச் சுற்றியுள்ள 8 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த ஆக.8-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் என்.எல்.சியின் சுரங்கத்துக்கு அருகிலுள்ள கிராமங்களில் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு பாதரசம் கலந்துள்ளதாகவும் மிகக் கடுமையாக நீர் மாசடைந்துள்ளது எனவும் அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.
இந்த வழக்கு கடந்த ஆக.10-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, என்.எல்.சி நிர்வாகம், கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக சுற்றுச்சூழல் துறை, மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள நீர் தொகுப்பாய்வு துறை அதிகாரிகள், கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு வருகை தந்து, சுகாதாரத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இணைந்து கடந்த 3 நாட்களாக நெய்வேலியைச் சுற்றியுள்ள 31 கிராமங்களில் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நெய்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான், மேல்பாதி, மும்முடிச்சோழன், அம்மேரி, தொப்புளிக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகளில் உள்ள நீர், குழாய்களில் வெளியே வரும் நீர் என மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட பின் அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.