இன்று அதிகாலையிலேயே பதற்றமானது சிவகாசி. ‘அங்கே ‘சடலம்’ கிடக்கு.. இங்கே ‘சடலம்’ கிடக்கு..’ என்று பேசிக்கொண்டார்கள். “நடந்தது ரெண்டு கொலை. ஒரு சடலம் நேருகாலனி மூர்த்தி ஆப்செட் பக்கத்துல கிடக்கு. இன்னொரு சடலம் கார்னேசன் காலனியில கிடக்கு.” என்றார்கள்.

“எங்கோ கொலை பண்ணிட்டு, இங்க வந்து போட்டுட்டாங்க. கொலை செய்யப்பட்ட ரெண்டு பேருமே லோடுமேன்கள். பேரு அர்ஜுனன், முருகன்..” என்று தகவல் சொன்னார்கள். சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர். அதற்குள் “ரெண்டு இல்ல.. மூணு கொலை..” என்று யாரோ கொளுத்திப்போட, “இன்னொரு சடலம் எங்கேப்பா?” என்று கேட்டு போலீஸார் திணறித்தான் போனார்கள். அப்புறம் “அதெல்லாம் புரளி.. நடந்தது ரெண்டே கொலைதான்..” என்று ஒரு முடிவுக்கு வந்தனர். விபரமறிந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாளும் அரக்கப்பரக்க சிவகாசி வந்து பார்வையிட்டார்.
‘என்ன காரணத்துக்காக யாரால் கொலை செய்யப்பட்டார்கள்? வேறொரு இடத்தில் கொலை செய்துவிட்டு, உடல்களை எதற்காக வெவ்வேறு இடங்களில் போட்டனர்?’ என சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
கொலைகளும் மலிந்துவிட்டனவே!