பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ஆம் தேதி துவங்கி தொடர்ந்து தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் விழுப்புரம் நகரை ஒட்டிய உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மாணவி ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியதில் மாணவி காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் மாணவிக்கு நேற்று கடைசி தேர்வு என்பதால் உடனடியாக முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
காலில் மாவுகட்டுடன் வந்த அந்த மாணவி தேர்வு அதிகாரிகளிடம் தனது நிலையை எடுத்துக்கூறி தேர்வு எழுதுவதற்கு அனுமதி கேட்டார். மாணவியின் நிலைமையை அறிந்த அதிகாரிகள் மாணவி தேர்வு எழுத அனுமதித்தனர். அதோடு மாணவி கேள்விக்கு பதில் சொல்வதை கேட்டு எழுதும் ஒருவரை மாணவிக்கு உதவியாக நியமித்து தேர்வு எழுத உதவி செய்தனர். விபத்தின் காரணமாக காலதாமதமாக தேர்வை எழுத தொடங்கிய அவருக்கு மட்டும் கூடுதலாக 45 நிமிடம் வழங்கப்பட்டது. கால் முறிந்த நிலையிலும் முதலுதவி செய்து கொண்டு இறுதித் தேர்வை எழுதிய மாணவிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.