பள்ளிபாளையம் அருகே, பேருந்தில் வரும் இளம்பெண்கள், மாணவிகளிடம் நடத்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பேருந்தை வழிமறித்து அவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (41). இவர், ஈரோட்டிலிருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர், பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் ஜடையைப் பிடித்து இழுப்பது பின்புறம் தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் கிளம்பின. பாதிக்கப்பட்ட மாணவிகள் எச்சரித்த போதிலும், செல்லத்துரை மீண்டும் அதே செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பிப். 4ம் தேதி அந்தப் பேருந்து பள்ளிபாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்குச் செல்ல ஏறினார். பேருந்து புறப்பட்டதும் அந்த மாணவியின் காதைப் பிடித்து திருகியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு அலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பேருந்தை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறையினர் செல்லத்துரையை மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பேருந்தில் ஏறும் இளம்பெண்களிடம் செல்லத்துரை தவறான செயல்களில் ஈடுபட்டது உண்மை எனத் தெரிந்தது. எனினும், பாதிக்கப்பட்ட மாணவி கேட்டுக்கொண்டதால் செல்லத்துரை மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.