அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் இடையே நடந்த அறிக்கை போர் காரணமாக பிரிந்துள்ளார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்க விழாவாக முஸ்லிம் லீக் சார்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், அனைத்து சமூகங்களில் கலாசார தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முப்பெரும் கொள்கையாக கடந்த 25 ஆண்டுகளாக அறிவிப்பு செய்து நடத்தி வருகிறோம்.
தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. கட்சி அமைப்பு தேர்தல் தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களாக பிரித்து, நிர்வாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் அகில இந்திய கவுன்சில் புதுதில்லியில் நடைபெறஉள்ளது. நாங்கள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். அதனுடைய ஒருங்கிணைப்பு குழுவில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உறுப்பினராக உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். தொடர்ந்து தேர்தல்களம் கண்டு வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களையும், 9 மண்டலங்களாக பிரித்து நவம்பர் மாதத்தில் பயிலரங்கள் நடத்தவுள்ளோம். திமுகவோடு கொள்கை ரீதியான கூட்டணி வைத்துள்ளோம். தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், கலாதார தனித்தன்மையை பாதுகாப்பது உள்ளிட்ட கொள்கையாகும். தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் மாறக்கூடிய சூழல் உள்ளது. அண்மையில் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அப்போது பல நேரங்களில் சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரினேன். அதற்கு அப்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பிரச்சனை விடுதலை செய்ய முடியாது என கூறினார். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த விடுதலை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்கள். அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அவர்களுக்குள் அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கு இடையே நடத்த அறிக்கைப் போர் காரணமாக பிரிந்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது மத்தியில் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்தது அதிமுக. பாஜக பல்வேறு சட்டங்களில் இரு அவைகளில் நிறைவேற்றுவதற்கு துணை நின்ற இயக்கம் அதிமுக. நிர்பந்தத்தினால் ஆதரிப்பதாக தற்போது கூறுகிறார். இதே நிர்பந்தம் நாளைக்கு வந்தால் மாறிவிடுவார் எடப்பாடி பழனிசாமி. எங்களை பொறுத்தவரை பாஜகவிற்கு மாறான கூட்டணி இந்தியா கூட்டணிதான். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிதான் நாங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் சிறுபான்மை சமுதாயத்தினர் இந்த கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்க உள்ளோம்'' என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பாணி, மாவட்டத் தலைவர் முகமது ஜக்கரியா, நகர தலைவர் அன்வர் அலி, நகர செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் அப்துல் ரியாஸ், கவுரவ ஆலோசகர் மகபூப் உசேன் ஆகியோர் பலர் உடனிருந்தனர்.