Skip to main content

ஆபாசமான தகாத வார்த்தைகளில் பேசியதாக பேராசிரியர் மீது மாணவி புகார்!

Published on 14/05/2018 | Edited on 14/05/2018


 

Student complains!


கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த மாணவி ஹரிதா, கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உளவியல் பிரிவில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கியுள்ள இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார். 
 

மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க பிரேமா மறுத்ததாகவும், விடுதியை பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து மறுநாள் விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் தெரிகிறது.

 

Student complains!


 

அதுமட்டுமல்லாமல், துறை தலைவர் வேலாயுதம் தனது அறைக்கு அழைத்து அறையினை பூட்டி ஆபாசமான தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுகட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மாணவி ஹரிதா குற்றம் சாட்டியுள்ளார்.
 

இதுதொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார்.
 

கேரளாவைச் சேர்ந்த ஹரிதா செக்குன்னி நம்மிடம் பேசும் போது, 
 

கோவை பாரதியார் கலை கழகத்தில் எம்.எஸ்.சி. உளவியல் முதலாம் ஆண்டு கடந்த 2017-ம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்.  அப்போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் எனது அறைத் தோழி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப் பட... நான்  விடுதி காப்பாளரை தொடர்பு கொண்ட போது, அவர் லைனில் கிடைக்கவேயில்லை.
 

அதன் பின்னர் நானே ஒரு கால் டாக்சியை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இரவு 11 மணிக்கு தான் நாங்கள் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாங்கள் ஹாஸ்டலுக்கு வந்தபோது ஹாஸ்டல் கதவு பூட்டப் பட்டிருந்தது. விடுதி கண்காணிப்பாளர் பிரேமா எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த கால் டாக்சி டிரைவர்... நான் தான் ஹாஸ்பிடலுக்கு கூடிப் போய் வந்தேன்... என அவர் சொன்ன பின்னரே நாங்கள் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டோம். ஆனால் இது சம்பந்தமாய் என்னிடம் விசாரணை எதுவும் நடத்தாமல் எங்கள் துறை தலைவர் வேலாயுதம் கடந்த 16-11-2017 அன்று  நீ டி.சி வாங்கிட்டு போயிரு.. மத்த வேலைகளை செய்யற உன்ன மாதிரி ஆளுகளுக்கு இங்கே இடமில்லைன்னு, என்னைய ஒரு விபச்சாரி போல கெட்ட வார்த்தைகளால் பேசி விட்டார். இதனால் மனமுடைந்த நான் மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு வந்தேன். என் படிப்பு பாழாகி விட்டதே என்று நான் கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்குமே புகார் அனுப்பினேன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்பதால் தான் வடவள்ளி இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமியிடம் புகார் கொடுத்தேன் என அவர் அழுது கொண்டே கூறினார்.
 

இந்த புகாரின் மீது வடவள்ளி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென வடவள்ளி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்