Skip to main content

டெல்டாவில் ரயிலை தொர்ந்து நிறுத்தும் போராட்டம். கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு.

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
Banwarbilalbb Pburohitb


 டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதற்காக நடைபெறும் போராட்டம் ரயில் மறியல் அல்ல ரயிலை தொர்ந்து நிறுத்தும் போராட்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளதை ரத்துசெய்யக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களான நாகை,திருவாரூர்,தஞ்சை,கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் ஏப் 5-ந் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு,மாதர் சங்கம்,வாலிபர் மற்றும் மாணவர் சங்கம் ஆகியவை பங்குபெறுகின்றனர்.

தொடர் மறியல் போராட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில் நமக்கு காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும். மேற்பார்வை குழு என்பது ஏமாற்று வேலை. தமிழ்நாட்டை விட கர்நாடகாவில் தான் மோடிக்கு அரசியல் ஆதாயம் உள்ளது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற துடிக்கிறார் மோடி. ஒரு கட்டத்தில் பாஜகவினர் ஹைட்ரோ கார்பன், ரசாயன மண்டலம் பற்றி மக்கள் மத்தியில் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். எனவே நாம் அனைவரும் மக்களின் வீடுகளுக்கு தனித்தனியாக சென்று இந்த திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை வளங்களை கொல்லையடிக்கவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழுஆதரவு அளிக்கிறது. விரைவில் ஆலையை மூடவலியுறுத்தி போராட்டங்களை நடத்தும். மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட டெல்டா மாவட்டங்களில் நடைபெற இருப்பது ரயில் மறியல் போராட்டம் மட்டுமல்ல ரயிலை தொடர்ந்து நிறுத்தும் போராட்டம் எனவே இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றிக்காண போராட்டமாக நடத்த வேண்டும் என்று பேசினார்.

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,ரமேஷ்பாபு நகரச்செயலாளர் பாரதிமோகன் உள்ளிட்டவர்கள் திட்டத்தின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் மறியல் போராட்டம் நோக்கங்கள் பற்றி பேசினார்கள். 

சார்ந்த செய்திகள்