வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நேற்று பால்வளத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 7 வரை உயர்த்தி வழங்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர். பசும்பாலுக்கான கொள்முதல் விலையை ரூ. 35 இல் இருந்து ரூ. 42 ஆகவும், எருமைப்பாலுக்கான கொள்முதல் விலையை ரூ. 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நேற்று தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கால்நடை விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அரசு அழைத்து தீர்வு காணும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கால்நடை விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவன மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை ஆகும் நிலையில், ஆவின் நிறுவனத்திற்கு 9 ஆயிரத்து 300 கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் பால் விநியோகிக்கப்படுகிறது. 9,300 சங்கங்களும் 3 வகையான சங்கங்களாகப் பிரிந்துள்ள நிலையில், மூன்றில் ஒரு சங்கம் தனது பால் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் வரை பால் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் வரை வழங்கத் தயாராக உள்ள நிலையில், அரசும் தனியாருக்கு நிகராக விலையை ஏற்றிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. போராட்டம் இன்றிலிருந்து துவங்கியுள்ளதால் நாளையிலிருந்து தான் இதன் தாக்கம் உணரப்படும் எனத் தெரிகிறது.