மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மது விருந்து கொண்டாட்டம் நடந்தது. இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையிலான போலீசார் சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆடல், பாடலுடன் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் அதிரடியாக மடக்கினர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள்.
இணைய தளம் மூலம் ஒன்று சேர்ந்த அவர்கள் 1500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி இந்த மது விருந்தில் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட அனைவரையும் போலீசார் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பெற்று எழுதி வாங்கிக் கொண்டு சிக்கிய அனைவருக்கும் அறிவுரை கூறி போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொகுசு விடுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சட்டவிரோதமாக வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் கட்டணம் வசூலித்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தியதும், நீச்சல் குளத்தின் சுகாதார வருடாந்திர பராமரிப்பு சான்றிதழ் இல்லாததும் தெரிந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமான அறைகள் விடுதியில் கட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்துவடிவேல் மற்றும் அதிகாரிகள் சொகுசு விடுதிக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக விடுதி உரிமையாளர் தங்க ராஜ், மானேஜர் ஜார்ஜ், வரவேற்பாளர் சரவணகுமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபு, கஞ்சா, போதை பயன்படுத்திய சிவ்சரன், ஹரி, ரிக்சாடா நெல்சன், மதுபானம் பதுக்கி வைத்திருந்த அருள், கார்த்தி, இர்பான், அனீஷ், வேலு, லிக்கி, தேவதயா ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.