ஏகத்துவ தப்லிக் ஜமாத் தலைவரும், பாஜக ஆதரவளருமான வேலூர் இப்ராஹிம் பாரதிய ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்த தெருமுனை பிரச்சாரத்தில், பாஜகவிற்கு ஆதரவாக பேச துவங்கியதும் நாம் தமிழர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் அவருக்கு எதிராக கடும் முழக்கங்கள் எழுப்பி, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை முற்றுகையிட்டு அவரை பேசவிடாமல் விரட்டினர்.
அதுபோல் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தினர். காவல் துறையினர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அங்குள்ள கடைக்குள் பூட்டினர். அதன்பின் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கைக்கலப்பாகி, லேசான தடியடி நடத்தினர். இதனால் நாம்தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதற்றம் நிலவியது.
அதன்பின் வேலூர் இப்ராஹிம்மை 1 மணி நேரம் கடைக்குள் பூட்டி வைத்த காவல்துறை பின்னர் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு அனுப்பியது. இதனால் தமுமுக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கொடைக்கானல் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சுமார் 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் வைத்து போலீசார் பாதுகாப்பு போட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கொடைக்கானல் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.