Skip to main content

திருச்சியில் திருடிய டூவிலர்களை பிரித்து விற்கும் குடோன்! - அதிர்ச்சியில் போலீஸ்!

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
bike


திருச்சி மாநகரில் டூவிலர் திருட்டுகள் சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட டூவிலர், வெளியில் கடைவீதியில் செல்லும் வேளையில் ரோட்டில் நிறுத்தப்பட்ட டூவிலர் போன்றவற்றை குறி வைத்து மர்ம கும்பல் ஒன்று திருடுவதை தொழிலாக கொண்டுள்ளது. மாநகர போலீசாருக்கு சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதால் திருடப்பட்ட வாகனங்களையும், திருடர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தனர். இந்த நிலையில் டூவிலரை பறி கொடுத்த ஒருவரே பாகங்களை பிரித்து விற்கும் குடோனை கண்டுபிடித்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருடப்பட்ட டூவிலர்களை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு சென்று அங்கு என்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை கழற்றி அடையாளம் தெரியாமல் ஆக்குவதும், பின்னர் அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும் வாடிக்கை. இதை பலவிதமான திரைப்படங்களிலும் காட்டியிருக்கிறார்கள்.

இதே மாதிரியாக திருச்சி மாநகரில் திருடப்பட்ட டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை அடையாளம் தெரியாத வகையில் கண்டம் செய்து அவற்றை விற்பனை செய்யும் குடோன் ஒன்று திருச்சி பாலக்கரையில் இருக்கிறது. இதை பறிகொடுத்தவரே நண்பர்களுடன் களத்தில் இறங்கி வேட்டையில் ஈடுபட்டு கண்டுபிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

 

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் இவர், மெடிக்கல் ரெப்பாக இருந்து வருகிறார். தினமும் டூவிலர்களில் டாக்டர்கள் நடத்தும் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தனது நிறுவன மாத்திரைகள் குறித்து எடுத்துரைத்து அவற்றை வாங்குவதற்கு பரிந்துரை செய்வது வழக்கம். சமீபத்தில் சரத்குமார் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி இருந்தார்.

திருச்சி பட்டாபி ராமன் தெரு பகுதியில் உள்ள டாக்டர் ஒருவரை சரத்குமார் சந்திக்க சென்றார். ஆஸ்பத்திரிக்கு வெளியே தனது புதிய டூவிலரை நிறுத்தி விட்டு டாக்டரை பார்க்க சென்றிருந்தார். திரும்ப வந்து பார்க்கையில் டூவிலரை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கம் போல் காவல் நிலையத்தில் சரி என்னான்னு பாக்கிறோம். நீங்களும் தேடி பாருங்க! எவனாவது திருடன் மாட்டினா உங்களுக்கு வேற வண்டி தரோம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் தனது நண்பர்கள் 3 பேரை சந்தித்து மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவத்தை சொல்லி வேதனைப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள், இதுபோன்ற புதிய டூவிலர்களை திருடுபவர்கள் அதை அடையாளம் தெரியாத வகையில் பிரித்தெடுத்து வண்டியையே மாற்றி விற்பனை செய்து விடுவார்கள் என்றும், நாம் 4 பேரும் பழைய இரும்பு குடோன் மற்றும் டூவிலர் பழுது பார்க்கும் பட்டறை பகுதிகளுக்கு சென்று தேடலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.

சரத்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள இருசக்கர வாகன பட்டறை மற்றும் குடோன் உள்ளிட்ட பகுதிகளில் தேடத்தொடங்கினார்.
  bike


இந்த பகுதி தான் திருச்சியிலே பழைய பொருட்கள் கிடைக்கும் இடம். திருச்சியில் எந்த வண்டி காணாமல் போனாலும் அது இங்கே கிடைக்கும் என்பது போலீசாருக்கு தெரியும். இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட காயலான் கடைகள் உள்ளன. இங்கே பேருக்கு தான் பழைய பொருட்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் இங்கே கிடைப்பது எல்லாம் புதுசரக்கு என்கிற பெயரில் விபத்து வண்டியில் உள்ள பொருட்களை விற்கிறோம் என்று சொல்லி புதுவிலைக்கே விற்று விடுவார்கள்.

இந்த கடைகளில் உள்ளவர்களில் பலரை ரெகுலர் கஸ்டமர்கள் போல் போலீசார் தெரிந்து வைத்துக்கொண்டு அவர்கள் மீது வழக்கு போடுவதும். அவர்களிடம் இருந்த நிறைய பணத்தை பிடுங்கி கொண்டே இருப்பார்கள் இது போலீஸ் வட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த செய்தி.

பாலக்கரை அண்ட கொண்டான் பகுதியில் உள்ள மெக்கானிக் குடோன் ஒன்றுக்கு இரவு 9 மணிக்கு 4 பேரும் சென்றனர். அப்போது அவர்களை பார்த்ததும் அங்கிருந்த மெக்கானிக் ஒருவர் ஓட்டம் பிடித்தார். சந்தேகப்பட்டு குடோன் உள்ளே பார்த்தபோது, அங்கு சரத்குமாரின் புதிய டூவிலர் என்ஜின் வேறு, வீல் வேறு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு 350 -க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பகுதி பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டு கிடந்தது.

 

 

பின்னர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, சரத்குமாரின் துண்டு துண்டாக கிடந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் குடோனையும் பூட்டினர். விசாரணையில் குடோன் உரிமையாளர் அசாருதீன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்