Skip to main content

வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா? - ராமதாஸ்

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
Sugarcane price in Tamil Nadu reduced by Rs. 950 to Rs. 3150 per ton

பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100: தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150-டன்னுக்கு ரூ.950 குறைத்து வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்பு  ரூ.4100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலை வழங்கும் மாநிலம் என்ற  பெருமையை பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உழவர்கள் நலனில் அக்கறை கொண்டு கரும்பு விலையை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால், தமிழ்நாட்டில் நடப்புப்பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை ரூ.3150 மட்டும் தான். இது மத்திய அரசு அறிவித்த விலை தான். தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு டன்னுக்கு  ரூ.215  ஊக்கத்தொகை  வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஊக்கத்தொகை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.  அதனால் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ.950 குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விவசாயிக்கும்  ரூ.38,000 இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று  மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சாப்  கரும்பு  10% சர்க்கரைத் திறன் கொண்டது  என்பதால் அதற்கு  மத்திய அரசின் விலை ரூ.3400,  மாநில அரசின் ஊக்கத்தொகை  ரூ.710 ஆகும்.  தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும்.

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு  விலை நிர்ணயிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுவது தான் பஞ்சாபில் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க காரணம் ஆகும்.  மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகளே வழங்கி விடும் என்பதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை; அதே நேரத்தில்  உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தமிழ்நாட்டிலும் 2017-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறை தான் இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது தான் அந்த முறை கைவிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை  அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு  ரூ.650 ஊக்கதொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதே முறை நீடித்திருந்தால் ஊக்கத்தொகை இப்போது ரூ.1000 ஆக உயர்ந்திருக்கும். அதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4150 கிடைத்திருக்கும்.  ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அதை செயல்படுத்தத்  தவறியதால் தான் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது.  மாறாக, ஊக்கத்தொகை  முழுவதையும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசுக்கு  மிச்சமாகும். ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக செலவு  ஏற்படும் என்பதால்  அதைத் தாங்கி கொள்ள முடியாது என்பதால் அந்த முறையை செயல்படுத்த  திமுக அரசு மறுக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்