தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று (22/05/2021) அனுசரிக்கப்பட்டது.
குமரெட்டியபுரம் கிராமத்தில் 13 பேரின் புகைப்படங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரணை செய்து முதல்வரிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதனடிப்படையில், சில வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையை அறிவித்தது.