முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை முடியும் வரை இந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், “சாந்தன், பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளது போல் செய்யப்பட்டுள்ளது. வழக்குகள் முடிந்த பின்பு அவரவர்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முருகன் உள்ளிட்ட நால்வரும், தாங்கள் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறை வளாகத்தில் வசதி ஏற்படுத்தித் தரக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.” எனச் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.