அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் எம் பி மற்றும் எம்எல்ஏக்கள் மேலும் செய்தித் தொடர்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
சமீபகாலமாக அதிமுகவுக்குள் உள்கட்சி பூசல் கடுமையாக எழுந்துள்ளது. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வீசிய பந்து "கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது" அதன் தொடர்ச்சியாகவே குன்னம் எம்எல்ஏ ஆதரவு கருத்தை கூற இதுதான் தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்களின் உணர்வாக உள்ளது என பல ஊர்களிலும் விவாதங்கள் வெடித்தது. இதைத் தடுக்கும் விதமாக இந்த கூட்டத்தை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசலாம் என பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களை தயார் செய்து சென்றார்கள். ஆனால் கூட்டம் தொடங்கிய உடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் யாரும் தனித்தனியாக உங்கள் கருத்துக்களை பேச வேண்டாம் அப்படி பேசினால் வேறு மாதிரி பிரச்சினை உருவாகி விட்டது என கட்சிக்கு களங்கம் ஏற்படும் எனக் கூறி தனித்தனியாக பேசாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதையும் மீறி சில எம்எல்ஏக்கள் பேசத் தொடங்க ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்குங்க என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
இதில் தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சிவபதி எழுந்து நின்று "சொல்லுங்க ஏன் எங்க கருத்த பேசக் கூடாதுன்னு சொல்றீங்க... என்ன காரணம் சொல்லுங்க நான் நிறைய பேச வேண்டி இருக்குது இங்க பேசாம எங்க பேசுவேன்..? என ஆவேசமாக கூற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து உங்ககிட்ட இருக்கிற விஷயம் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் இப்போது இங்கு பேச வேண்டாம் நீங்க பேசினால் பலபேர் பேசுவாங்க நம்ம கட்சிக்கு வெளியில அவப்பேரு ஏற்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக தான் கூறுகிறேன் சிவபதி தயவுசெய்து அமருங்கள் என கூறி அவரை அமர வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதேபோல் பல எம்எல்ஏக்கள் தலையை தூக்கி பேசுவதற்காக முயற்சி செய்தபோது கையை உயர்த்தி அவர்களை அமருமாறு சைகை மூலம் கூறி அவர்களை அமர வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.