வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை திருமலைச்சேரி கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டில் முதலாம் பரந்தாமன் சோழன் மகன் கிருஷ்ணன் சோமநாதர் திருக்கோயிலை கட்டியுள்ளார். பழமைவாய்ந்த இந்த கோயிலில் இருந்து 12 யோகி சிலைகளை காணவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை திருமலைச்சேரி கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டில் பிற்கால சோழரான முதலாம் பரந்தாமன் சோழன் மகன் கிருஷ்ணன் என்பவர் சோமநாதர் என்கிற சிவன் கோயிலை கட்டினார். இந்த கோயிலில் இருந்து 12 யோகிகள் சிலைகள், தேவி சிலை, தூரபாலகன் கற்சிலைகள் திருடி செல்லப்பட்டுள்ளது.
திருடி செல்லப்பட்ட அந்த சிலைகள் அமெரிக்க இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கோயிலில் இருந்த நந்தி சிலையை போலவே சமீபத்தில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னன் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட நந்தி சிலைகளில் ஒத்துள்ளது. மேலும் அந்த கோயிலில் புதிதாக சுமார் 30 தூண்கள் உள்ளது. இது எப்படி இங்கு வந்தது, பழைய தூண்கள் என்னவானது என தெரியவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் மனு தந்தார். மனு அளித்து ஒரு மாதமாகியும் புகாரின் மீது வழக்கு பதியபடவில்லை.
இதனை தொடர்ந்து இந்த சிலைகடத்தல் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மணிக்கவேலை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் டெல்லிபாபு. புகாரின் தன்மையை அறிந்த அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டார். அதன்பின் வேலூர் மாவட்ட எஸ்.பி அந்த கோயில் அமைந்துள்ள வாலாஜா காவல்நிலைய ஆய்வாளரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து வாலாஜா காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டுள்ளது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தால் இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பாகவும், கடத்தியவர்கள் தொடர்பாகவும் பல முக்கிய தகவல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், உள்ளுர் போலிஸார் சரியாக விசாரிக்கமாட்டார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.