திண்டுக்கல்லில் உள்ள குடைபாரப்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் அகற்றியதால் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1350 இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் அனுமதியளித்துள்ளனர். திண்டுக்கல் நகரில் மட்டும் 50 இடங்களில் சிலை வைக்க போலீசார் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்பட்டு உள்ள இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் அனுமதி அளிக்காத இடங்களில் சிலைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள குடைபாரப்பட்டியில் ஒவ்வொரு வருடமும் ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்றாம் நாளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்து முன்னணி சார்பில் மேலும் சிலை ஒரு வைக்க போலீசாரிடம் அனுமதி கேட்டனர் ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பிறகு அந்த சிலையை அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்க முயன்றனர்.
இந்த நிலையில் திடீரென டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் அங்கு வந்த போலீசார் அதனை அகற்ற முயன்றனர். ஆனால் இந்து முன்னணி நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி சங்கர் கணேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் செல்லாததால் 5 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதன் பிறகு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலையை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள கோட்டை குளத்தில் கரைக்க பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க குடைபாரப்பட்டி உள்பட வேம்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.