Skip to main content

ஸ்தம்பித்த மதுரை; இன்றும் தொடருமா மழை?

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
nn

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று  (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மதுரையில் உள்ள சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதுரையில் நேற்று மாலை 3 மணி முதல் 03.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்றும் மதுரையில் மழைப்பொழிவு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி மற்றும் வங்கக் கடலில் கரையைக் கடந்த டானா புயல் வட இந்தியா வழியாக குளிர் அலையை தமிழ்நாடு வழியாக ஈர்க்கிறது. இதனால் சென்னையில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. நேற்று பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் மட்டும் அரியலூர் வரை மழைப்பொழிவு இருந்தது.

அதிகபட்சமாக திருப்பூர் உப்பாறு அணைக்கட்டில் 72 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்துள்ளது. குறைந்த நேரத்தில் மதுரையில் அதிகபட்சம் மழைப்பொழிவு இருந்துள்ளது. இன்றைய நாளை பொறுத்தவரை வங்கக்கடலை நோக்கி வெப்ப நீராவி அரபிக்கடல் மற்றும் நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று தென் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக டெல்டா மாவட்டங்கள் வழியாக பயணிக்கும். இதனால் தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும். இன்று திருப்பூர் மாவட்டம் தெற்கு பகுதி மற்றும் திண்டுக்கல், கோயம்புத்தூர், வால்பாறை, கொடைக்கானல் மலைப்பகுதி, திருச்சி மாவட்ட தெற்கு பகுதி, புதுக்கோட்டை மாவட்ட பகுதி டெல்டா மாவட்டங்களில் தெற்கு பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று மழை இருக்கும்' என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்