தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிலிருந்தே காணொலி காட்சி மூலமாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில், தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான எனது தொலைநோக்கு பார்வையை அறிவிக்க உள்ளேன். இதுவரை தமிழக மக்களிடம் நடத்திய சந்திப்புகள், திமுக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் ஆகியோருடன் பலகட்டங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து இந்த தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் ஆட்சிமாற்றம் நடைபெறும்,” என்று கூறியிருந்த நிலையில், வரும் மார்ச் 7 அன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.